தலச்சிறப்பு |
கயிலை மலையின் ஒரு கொடுமுடியாக உள்ளதாலும், பாண்டிய அரசன் வழிபட்டதாலும், இத்தலம் 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'மகுடேஸ்வரர்', 'கொடுமுடிநாதர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன், மிகச் சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'வடிவுடை நாயகி', 'பண்மொழியம்மை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
உள்பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, உமாமகேஸ்வரர், அகத்தீஸ்வரர், வள்ளி தேவசேனை சமேத ஆறுமுகப் பெருமான், நடராஜர், 63 நாயன்மார்கள், நால்வர் முதலானோர் தரிசனம் தருகின்றனர். வெளிப்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்த கன்னியர், சரஸ்வதி, சனீஸ்வரன், சூரியன், சந்திரன், பைரவர் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.
மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் இத்தலத்து இறைவனை வழிபட்டதால், பிரகாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரநாராயணப் பெருமாள் சன்னதியும், வன்னி மரத்தின் கீழ் பிரம்மா சன்னதியும் உள்ளது. அதனால் தற்போது இக்கோயிலை 'மும்மூர்த்தி தலம்' என்று அழைக்கின்றனர். பெருமாள் சன்னதியில் பிரம்மா, வசுதேவர், ஆஞ்சநேயர், கருடாழ்வார், விபீஷணர், பன்னிரு ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. தாயார் திருமங்கை நாச்சியார் சன்னதி தனியாக உள்ளது.
பாண்டிய அரசனுக்கு ஏற்பட்ட ஒரு கறையை தீர்த்த தலமாதலால் 'கறையூர்' என்றும் வழங்கப்படுகிறது. கறையூர் என்பதை சுந்தரர் தமது இத்தல தேவாரத்தில் பாடுகிறார். சுந்தரர் இத்தலத்தில்தான் 'மற்றுப் பற்றெனக்கின்றி' என்னும் நமச்சிவாயப் பதிகத்தை பாடினார்.
மகாவிஷ்ணு, பிரம்மா, அகத்தியர், பரத்வாஜர் ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|